சபரிமலையில் புதிய விதிகள் – பெண்கள், குழந்தைகளுக்கு “ஐடி கார்ட்” அவசியம்!
கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் தரிசனத்திற்கு வருகின்ற 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் கண்டிப்பாக புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டையுடன் வரவேண்டும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் கமிஷனர் பி.வேணுகோபால் கூறியுள்ளார்.இதுகுறித்த அறிக்கையில், "மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை வருகிற 16 ஆம் தேதி மாலை திறக்கப்படுகிறது.
சபரிமலை ஐய்யப்பன் கோவில் மண்டல, மகர விளக்கு பூஜைகளை முன்னிட்டு, தரிசனத்திற்கு வரும் ஐய்யப்ப பக்தர்களுக்கு குடிநீர் வினியோகம், மருத்துவ வசதிகள், அன்னதானம் உட்பட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க தேவசம் போர்டு சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
சீசனை முன்னிட்டு பம்பை முதல் சபரிமலை சன்னதி வரை பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், சிறுவர், சிறுமிகள் கூட்டத்தில் வழிமாறாமல் இருக்க, சாமி தரிசனத்திற்கு வரும் 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகள் புகைப்படம் ஒட்டிய மற்றும் வயதுடன் கூடிய அடையாள அட்டையுடன் வரவேண்டும்.
10 வயது முதல் 50 வயதுக்குள் உள்ள பெண்கள் ஐய்யப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. சாமி தரிசனத்திற்கு வரும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் வயது சான்றிதழ் கொண்டு வர வேண்டும்.
அல்லது வயதுடன் கூடிய போட்டோ பதித்த அடையாள அட்டையுடன் வர வேண்டும். சாமி தரிசனத்திற்கு வரும் அய்யப்ப பக்தர்கள் கண்டிப்பாக பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment